(அப்துல்சலாம் யாசீம்)
நாட்டில் பயங்கரவாத யுத்தம் நிலவிய காலத்திலும் தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்ட போதும் நாட்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதில்லை என்பதால் கொரோனா பயங்கரத்துக்காக தேர்தலை தொடர்ந்தும் ஒத்தி வைக்காமல் ஜூன் 20ல் அரசு தேர்தலை நடத்த வேண்டும் என உலமா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இன்று (25) ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார்.
மேலும் இதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
தேர்தலை நடத்துவதில் எந்த சிக்கலும் இருக்காது.
கடந்த 5 நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டு மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கையை கண்டனர்.
தொழிலுக்கு போவோர் தொழிலுக்கு சென்றனர். பொருள் கொள்வனவு செய்வோர் சமூக இடைவெளியில் நின்று அதனை செய்தனர். எந்த பிரச்சினையும் இருக்கவில்லை.
இதே போல் தேர்தல் தினத்தன்றும் சமூக இடைவெளியில் அணிவகுத்து நின்று வாக்களிப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது. அதே போல் கட்சிகள் பொது கூட்டங்கள் வைப்பதை தவிர்த்து வீடு வீடாக பிரச்சாரம் செய்யலாம்.
எவ்வாறு வீடு வீடாக சென்று மரக்கறிகள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறதோ அவ்வாறு கட்சிகளும் தமது தேர்தல் வியாபாரத்தை மேற்கொள்ளலாம், பிரசுரங்கள் வழங்கலாம். எந்த தடையும் இல்லை.
நாட்டில் பயங்கர யுத்தம் நடைபெற்ற காலத்தில் பல வேட்பாளர் கொல்லப்பட்ட காலத்திலும் நாட்டில் தேர்தல்கள் நடை பெற்றன.
88ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலின் போட்டியிடுவோரை சுடுவோம் என புலிகள் அச்சுறுத்தி அவ்வாறு போட்டியிட்ட சிலர் சுடப்பட்டும் முஸ்லிம் காங்கிரஸ் அத்தேர்தலில் போட்டியிட்டது. இப்போது கொரோனாவுக்கு பயந்து முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலை ஒத்தி போடச்சொல்வது அதன் கோழைத்தனத்தை காட்டுகிறது.
தேர்தல் பொதுக்கூட்டத்தில் லலித் அத்துலத்முதலி போன்றோர் குண்டு வைத்து கொல்லப்பட்ட போதும் , சந்திரிக்கா குண்டடி பட்டு ஒரு கண்ணை இழந்த போதும் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படவில்லை.
இவ்வாறு எந்த இடத்தில் எப்போது குண்டு வெடிக்கும் என்று தெரியாத நிலையிலும் நாட்டில் ஐ தே க அரசோ சந்திரிக்கா அரசோ தேர்தல்களை ஒத்திவைக்கவில்லை. கொரோனா வைரஸ் என்பது சமூக இடைவெளி இருந்தால் அதனை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்பது தெரிய வந்துள்ளது. இன்று வரை பிரதான கட்சிகளின் எந்தவொரு வேட்பாளரும் கொரோனாவால் கொல்லப்படவில்லை என்பதும் முக்கியமாகும்.
நாடு இன்றிருக்கும் நிலையில் தேர்தல் வைத்தாலும் ஏற்கனவே பாராளுமன்றத்தில் இருந்தவர்களில் 90 வீதமானோர் மீண்டும் தெரிவு செய்யப்படும் சாத்தியக்கூறே நாட்டு மக்கள் மனோ நிலையில் உள்ளது.
ஆகவே பொதுக்கூட்டங்கள் நடத்துவதை தடை செய்து, மாவட்டத்துக்கு மாவட்டம் வேட்பாளர்களோ, தலைவர்களோ செல்வதை தடை செய்து, சமூக இடைவெளி விட்டு தேர்தலை குறிப்பிட்ட திகதியில் நடத்தும் படி உலமா கட்சி அரசை கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment