திருகோணமலை மாவட்ட மீனவர்களுக்கு எதிராக அரசியல் நோக்கம் கொண்ட இனவாத நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
சுருக்கு வலை மூலம் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒவ்வொரு வருடமும் மீனவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்த வருடத்துக்கான அனுமதி பத்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. இந்த அனுமதி பத்திரம் வழங்கப்படாமையினால் இந்த தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்று தமது வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் நாட்டில் கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் பொதுமக்கள் தமது தொழிலை இழந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் சந்தர்பத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு சென்ற பல படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏழு கிலோமீட்டருக்கு அப்பால் சென்று மீன்பிடிக்காமையால் கைது செய்யப்படுவதாக இந்த கைதுக்கு காரணம் சொல்லப்படுகிறது.
ஆனால் தாம் மீன்பிடிக்கும் இடம் கரையில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தூரம் என அளவிடும் கருவிகள் எதுவும் மீனவர்களிடம் இல்லை. அத்துடன் சிறுபான்மையினருக்கு சொந்தமான படகுகள் மட்டும் கடற்படையினரால் கைப்பற்றப்படுவது மீனவர்களுக்கு எதிரான அரசியல் நோக்கம் கொண்ட இனவாத நடவடிக்கையாகவே விளங்குகிறது.
இதனால் இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள இங்குள்ள மீனவர் சங்கங்கள் முயற்சி செய்யும்போது நீங்கள் குறுப்பிட்ட அரசியல் கட்சி ஒன்றுக்கு ஆதரவு அளிக்க முன்வந்தால் உங்களுக்கு அனுமதிபத்திரம் பெற்றுத்தருவதொடு கடற்படையினர் படகுகளை கைப்பற்றாத வண்ணம் தாம் பார்த்துக்கொள்வதாக சில அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் தாம் அழுத்தத்துக்கு உட்படுவதாக மீனவர் சங்க பிரதிநிதிகள் எனக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளனர்.
ஆகவே இதுதொடர்பாக ஆராயும்படி எமது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நான் எழுத்துமூலம் அறிவித்துள்ளதோடு இந்த அழுத்தங்களை தாண்டி இவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்க தேவையான முயற்சியை மேற்கொண்டு வருகிறேன் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment