(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் ரொட்டவெவ மற்றும் சம்பூர் பிரதேசங்களில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
சம்பூர் பிரதேசத்தில் மீள் குடியமர்த்தப்பட்ட நிலையில் தற்போது காணிகளுக்குள் தென்னைமரங்கள், மரவள்ளி மரங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் செய்து வருகின்ற வேளையில் யானைகள் கிராமத்துக்குள் உட்புகுந்து அட்டகாசம் செய்து வருவதுடன் பயிர்களை சேதம் ஆக்கி வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ கிராமத்தில் இரவு நேரங்களில் மக்கள் நடமாடும் பகுதிகளுக்கு யானைகள் வருகை தருவதாகவும் இதனால் உயிர் சேதங்கள் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.
வாழை மரங்கள், பலா மரங்கள், தென்னை மரங்கள் போன்றவற்றை நாளுக்கு நாள் சேதப்படுத்தி வருவதாகவும் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்கு யானை மின் வேலிகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும்
அரச அதிகாரிகள் கரிசனை காட்டவில்லையெனவும் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே சம்பூர் மற்றும் ரொட்டவெவ கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லையை நீக்குவதற்கு யானை மின் வேலிகளை அமைக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment