(ஏ.பீ.எம்.பவாஸ்)
அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மங்கள சமரவீரவுடன் முடிந்துவிடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.
கிண்ணியாவில் இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
மக்கள் இன்றைய சூழ்நிலையில் கொரோனா அச்சத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது அரசாங்கம் தேர்தலை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுகிறது. சம்பிக்க ரணவக்கவுடன் ஆரம்பித்த அரியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் சில நாட்கள் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டு இன்று ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீரவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது இவர்களுடன் முடிந்துவிடாது இந்த அரசுக்கு சவாலாக திகழும் எதிர்கட்சி உறுப்பினர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள், கைதுசெய்யப்படுவார். இவற்றை எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே உள்ளது .
இதனால் எமது பயணத்தை இவர்களால் நிறுத்த முடியாது.
மங்கள சமரவீர ஏன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.புலிகளால் விரட்டப்பட்ட வன்னி மக்களின் வாக்குரிமையை பயன்படுத்த உரிய அனுமதி பெற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மூலமாக அவர்களை வாக்களிக்க அழைத்துச் சென்றமையால்.
ஆனால் 2015 ஆம் ஆண்டுக்கு முன் நடைபெற்ற மேதின கூட்டங்களுக்காக நூற்றுக்கணக்கான பேரூந்துகள் கட்டணம் எதுவுமின்றி அப்போதைய மஹிந்த ராஜபக்ஸ அரசால் சேவைக்கு அமர்தப்பட்டமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஏற்பட்ட கோடிக்கணக்கான நஷ்டங்களுக்கு எதிராக நடவடிக்கை இல்லை.
மத்திய வங்கி ஊழல் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசால் ஏன் அதுதொடர்பாக இன்னும் விசாரணை நடத்தப்படவில்லை. ஏன்எனில் இன்று அவர்கள் அனைவரும் ஒரே அணியில் உள்ளனர்.
நாடு இன்று மறைமுக இராணுவ ஆட்சி ஒன்றின் கீழ் உள்ளது நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு பதிலாக இராணுவ அதிகாரிகள் உயர்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் நடைமுறைகளை மாற்றி நாட்டை பாதுகாப்பேன் என்று கூறும் ஜனாதிபதி அமைச்சரவையில் யாருடன் பயணம் செய்கிறார் என பாருங்கள். ஏப்ரல் 19 ஆம் திகதியுடன் கொரோனா நாட்டை விட்டு சென்றுவிடும் என ஒரு அமைச்சர் கூறினார். கப்பல் மூலம் வெளிநாட்டு பணம் இலங்கைக்கு வந்துகொண்டிருப்பதாக ஒரு அமைச்சர் கூறினா.ர் பண தட்டுபாடு ஏற்பட்டால் பணத்தை அச்சடித்துக்கொள்வோம் என ஒருவர் கூறுகிறார். அதிலும் முக்கியமாக கொரோனா வைரசை அழித்து வாக்களிக்கும் போது மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்கும் செயன்முறையை ஒருவர் கூறினார்.
இவ்வாறானவர்களுடனையே ஜனாதிபதி தமது பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இவ்வாறானவர்களுடன் அடுத்த ஐந்து வருடங்கள் பயணத்தை தொடர்ந்தாள் நாட்டின் நிலைமை எனாவாகும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
மக்கள் இன்னமும் கொரோனா அச்சத்தில் இருந்து மீண்டு தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. எனவே இச்சந்தர்பத்தில் அரசியல் கைதுகளையும் முட்டாள்தனமான பேச்சுக்களையும் விட்டுவிட்டு இந்த அசாதாரண சூழ்நிலையில் இருந்து நாட்டு மக்களை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment