ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புல்மோட்டை விசேட அதிரடிப்படையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நேற்று (09) திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹொரவ்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது உடையவர் எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த அபுசாலி அபூபக்கர் என்பவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த சந்தேகத்தின் பேரிலேயே இவர் புல்மோட்டை - ஜின்னா நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment