(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேசத்தில் லொறியின் சாரதியை தாக்கிவிட்டு 70,000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் ஐவரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் ரந்திக ஜெயலத் முன்னிலையில் இன்று (04) கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஆஜர்படுத்திய போதே கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது மற்றும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரவ்பொத்தானை -முக்கரவெவ பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி உமி ஏற்றிச் சென்ற லொறியை நிறுத்தி லொறியின் சாரதி தாக்கிவிட்டு வாகனத்திற்குள் இருந்த 70 ஆயிரம் ரூபாயை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த போலீசார் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகத்தின் பேரில் இரண்டு லொறியையும், லொறியின் சாரதி உட்பட 5 பேரை கைது செய்துள்ளதாகவும், லொறியின் சாரதியை தாக்கி 70000 ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தலைமறைவாகிய நிலையில் அவரைத் தேடி வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
குறித்த லொறியின் சாரதியை தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர்களை எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்த உள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment