(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் இருவர் காணாமல் போயிருந்த நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (13) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் -வலிகாமம் தெற்கு பிரதேசத்திலுள்ள குப்பிளான் பகுதியைச் சேர்ந்த நவரஞ்சன் கௌதமன் (21வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும், சிவச்சந்திர ராசா சிந்துஜன் (21வயது) காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-
சிவராத்திரி தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் சிலர் வருகை தந்ததாகவும் சமய வழிபாடுகளை முடித்து விட்டு வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர் நிலாவெளி கடற்கரை பகுதிக்கு நீராடச் சென்றபோது இருவர் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment