(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 07 மரணங்கள் பதிவான நிலையில் குறிஞ்சாங்கேணி பகுதியில் ஐவரும், கிண்ணியா மற்றும் திருகோணமலை பகுதிகளில் தலா இருவரும் உயிரிழந்துள்ளதாகவும் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று (06) காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 29 ஆண்களும் 23 பெண்களும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தெரியவருகின்றது.
இதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் இன்று வரைக்கும் 104 பேர் மரணித்து உள்ள நிலையில் 3616 பேர் மொத்தமாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதேவேளை கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஐந்தாம் திகதி வரை 191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 95 கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 31 பேரும், கந்தளாயில் நான்கு பேரும், குச்சவெளியில் நான்கு பேரும்,குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேரும், மூதூர் பிரதேசத்தில் 11 பேரும்,தம்பலகாமத்தில் ஐந்து பேரும், திருகோணமலை மற்றும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் தலா 16 பேர் வீதம் உயிரிழந்துள்ளதாகவும் திருகோணமலை சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஈச்சிலம்பற்று,கோமரங்கடவல,பதவிசிறிபுர,சேருவில போன்ற சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுகளில் மரணங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை எனவும் திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment