திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகின்றது.
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பாவனைக்காக 12 நோயாளர் காவு வாகனங்கள் இருந்தும் தற்போது 3 வாகனங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நோயாளிகளை மேலதிக சிகிச்சைகளுக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதில் தாமதங்கள் ஏற்பட்டு வருவதாகவும், இதனால் நோயாளிகள் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக ஒரு வாகனம் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 3 வாகனங்கள் மாத்திரமே நோயாளர்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அத்துடன் குறித்த வாகனங்களில் இரண்டு வாகனங்கள் முற்றாக பாவிக்க முடியாத நிலையில் இருப்பதோடு ஏனைய 7 வாகனங்களும் திருத்த வேலைக்காக வேலைத்தளங்களிலும், வைத்தியசாலை வளாகங்களிலும் நீண்டகாலமாக தரித்து நிற்பதாகவும் தெரிய வருகின்றது.
வைத்தியசாலையின் முறையற்ற நிர்வாகம் மற்றும் பராமரிப்பு காரணமாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், பல இலட்சம் ரூபா செலவு செய்து திருத்தப்பட்டு வருகின்ற வாகனங்கள் சில நாட்களிலேயே மீண்டும் திருத்த நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், மருந்துகளை ஏற்றி வருகின்ற வாகனம்கூட தற்போது வைத்தியசாலையில் இல்லாத நிலை காணப்படுவதாகவும் பொதுமக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
No comments:
Post a Comment