இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட வாக்காளர்களுக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, வன்னி மாவட்டத்தில் வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து கொடுத்தமைக்காக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் வேண்டுமென்றே குற்றங்களைச் சுமத்தி, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதனால், அதற்கு எதிராகவும் அதனைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கீழ் இயங்கி வந்த, நீண்டகால இடம்பெயர்ந்தவர்களுக்கான மீள்குடியேற்ற அமைச்சின் திட்ட முகாமைத்துவ பிரிவின் ஊடாக, குறித்த போக்குவரத்துக்கான அனுமதி அரசிடம் முறைப்படி பெறப்பட்டிருந்தது. அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில், நிதியமைச்சின் ஒப்புதலுடனும், தேர்தல் ஆணையாளரின் அங்கீகாரத்துடனும், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகளுக்கு கட்டணம் செலுத்தப்பட்டு, இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு இந்தப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
இந்த விடயம் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு, அவரைக் கைது செய்யும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையிலேயே குறித்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment