(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 10ம் கட்டை பகுதியில் மின்சார கம்பியில் சிக்கி சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் கடை உரிமையாளரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேலு முன்னிலையில் இன்று (10) ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் மொரவெவ, 10ம் கட்டை, கிதுல் உதுவ பகுதியைச் சேர்ந்த டீ. ஜே.நிஷாந்த நிமால் ஐயவர்தன (39வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- திருகோணமலை- வெல்கம் விகாரை சிங்கள வித்தியாலயத்தில் மூன்றாம் தரத்தில் கல்வி பயின்று வரும் பத்தாம் கட்டை பகுதியைச் சேர்ந்த கவிஸ்க தெனத் சஞ்சீவ (8வயது) சிறுவன் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சோடா வாங்குவதற்காக சென்றபோது ஊரடங்கு சட்டம் காரணமாக கடை மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடையைச் சுற்றி யானை மின் வேலிகள் போடப்பட்டிருந்த நிலையில் கடை உரிமையாளர் யானை மின்வேலியில் மின்சார சபைக்கு சொந்தமான மின்சாரத்தை திருட்டுத்தனமாக பொருத்தி இருந்ததாகவும் இதில் சிக்குண்டு சிறுவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment