(அப்துல்சலாம் யாசீம்)
அரசியல் தீர்வு கிடைத்தால் அபிவிருத்தியை நோக்கி செல்ல முடியுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை மின்சார நிலைய வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று (02) வெள்ளத்தம்பி சுரேஷ் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்விதமான அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரியப்படுத்திய போதே அக் கருத்தை அவர் கூறினார்.
ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களிலும் உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றவர்கள் மக்களுக்கு தேர்தல் பற்றிய விடயங்களை தெரியப்படுத்துவதுடன், தெளிவு படுத்த வேண்டும் எனவும் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்தால் மாத்திரமே அபிவிருத்தியை நோக்கி செல்ல முடியும் என தெளிவூட்ட வேண்டுமெனவும் எனவும் இதன்போது வலியுறுத்தினார்.
இம்முறை ஒரு வித்தியாசமான தேர்தலாக இருப்பதால் தமிழ் மக்களுடைய வாக்குகளை சிதறடிக்காமல் அனைத்து தமிழ் பேசும் மக்களும் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க உரிய வழிமுறைகளை அமைத்துக் கொடுக்க வேண்டுமெனவும், மற்ற கட்சிகளுக்கு வாக்களித்து தமிழ் மக்களுடைய வாக்குகளை சிதறடிக்கும் ஒரே தாய் பெற்ற பிள்ளைகள் போல் செயற்பட வேண்டும் எனவும் இரா சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், திருகோணமலை நகரசபையின் தலைவர் இராஜநாயகம், திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் கலாநிதி டொக்டர் ஞானகுணாளன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment