முஸ்லிம் சமூகம் பொறுப்புணர்வுடனும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும் -ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

முஸ்லிம் சமூகம் பொறுப்புணர்வுடனும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும் -ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வேண்டுகோள்!

Share This



இலங்கை முஸ்லிம் சமூகம் அண்மைக் காலமாக பல்வேறு சவால்களை, நெருக்கடிகளை சந்தித்து வருவதை சகலரும் அறிவர். முஸ்லிம் சமூகம் அரசியல் ரீதியிலும் பலவீனமடைந்துள்ள ஓர் இக்கட்டான கால கட்டம் இது. இந்நிலையில் முஸ்லிம் சமூகம் பொறுப்புணர்வுடனும் நிதானமாகவும் செயலாற்ற வேண்டியது மிக அவசியம்.

 
ஒரு சில பெரும்பான்மை ஊடகங்கள் ஊடக தர்மங்கள், விழுமியங்களுக்கு முரணாக செய்திகளை அறிக்கையிடுவது சிறுபான்மை சமூகங்களைப் பாதித்து வருகிறது. இந்நிலையில் முஸ்லிம்களுக்காக இயங்கும் ஊடகங்களே அப்பாதிப்பை சரிசெய்யும் வகையில் உண்மைகளை வெளிக்கொண்டு வருகின்றன.
 
அதேநேரம், முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற ஒரு சில ஊடகங்களும் தற்போது பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சில பத்திரிகைகள், இணையதளங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், முஸ்லிம் சமூகம் முஸ்லிம் வாசகர்கள், நேயர்களைக் கொண்ட ஊடகங்களைப் பாதுகாப்பது அவசியமாகும். அவற்றை பலவீனப்படுத்தும் வகையில் செயற்படுவது சமூகத்தை மேலும் இக்கட்டில் தள்ளிவிடும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
 
பொதுவாக ஊடகங்கள் எப்போதும் ஊடக தர்மங்களைப் பேணி, ஊடக ஒழுக்கக் கோவைகளுக்கேற்ப செயலாற்றுவது அவற்றின் தலையாய பொறுப்பாகும். அவ்வாறே அவற்றின் ஊடக சுதந்திரமும் பாதுகாக்கப்படல் வேண்டும்.
 
முஸ்லிம் வாசகர்கள், நேயர்களைக் கொண்ட ஊடகங்கள் முஸ்லிம் சமூக விவகாரங்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையுமளித்து வருகின்ற நிலையில், முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வருகின்ற நிலையில் ஏதாவதொரு விடயத்தை வைத்து அவற்றைப் பலவீனப்படுத்துவதோ அல்லது புறக்கணிப்பதோ, புறக்கணிக்குமாறு முஸ்லிம் சமூகத்தை வேண்டுவதோ அறிவுடைமையாகாது. அவ்வாறு செய்வது முஸ்லிம் சமூகத்தை மேலும் பலவீனப்படுத்துவதாகவே அமையும்.

எனவே, சமகால நிலைமைகளை கவனத்திற் கொண்டு சகல தரப்பினரும் பின்விளைவுகள் பற்றிய பிரக்ஞையுடனும் கூட்டுப் பொறுப்புணர்வுடனும் செயற்படுவது காலத்தின் கட்டாயம் என்பதை முஸ்லிம் ஊடகவியலாளர்களின் அமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment

Pages