பணிப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற் பட வேண்டும் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

பணிப் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற் பட வேண்டும்

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக சென்று அந்நியநாட்டுச் செலாவணியை எமது நாட்டுக்கு பெற்றுத்தரும் பணிப்பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.துரைநாயகம் தெரிவித்தார். 

இன்று (18) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற சபை அமர்வின்போது தனிநபர் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

குடும்ப வறுமையின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்கள் வீட்டு உரிமையாளர்களினால் ஒழுங்கான சம்பளம் வழங்கப்படாமலும், உடல், உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் வருகின்றார்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மூலம் வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் தொடர்ந்தும் இவ்வாறான சொல்ல முடியாத துயரங்களை எதிர் கொண்டு வருவதானது மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மீதும், அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகின்றது.  

நாட்டுக்கு அதிக வருமானத்தை பெற்றுக் கொள்ளும் முகமாக வெளிநாட்டில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் வேலைவாய்ப்பு பணியகம், வேலைக்கு செல்லும் நபர்களுடைய நலங்கள் தொடர்பில் கண்காணிக்கும் முகமாக அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிவர வேண்டியது அவசியம். அந்தவகையில் குறைந்தது ஒருமாதத்துக்கு ஒரு முறையாவது அவர்களுடைய நலன்கள் தொடர்பில் அறிந்து கொள்ளும் பொறிமுறையினை உருவாக்க வேண்டும். இவ்வாறான நாடுகள் மனித உரிமைகள் செயற்பாட்டில் பின்தங்கிய நிலையில் இருப்பதனால் எமது நாட்டு பிரஜைகளினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பெரும் பொறுப்பு எமது அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்த விடையத்தை பாராளுமன்றம்வரை கொண்டு சென்று முறையான தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிட முடியாது எனவும்,

அண்மையில் குவைட் நாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற ஈச்சிலம்பற்று பூமரத்தடிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட 3 பிள்ளைகளின் தாயான சரோஜாதேவி என்பவர் 04.03.2021 அன்று வேலை செய்யும் இடத்தில் வைத்து இறந்துள்ளதாக அல்லது கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் வேறு நபர்கள் மூலம் உறவினர்களுக்கு தகவல்கள் கிடைத்தபோதும் இது தொடர்பாக வேலைவாய்ப்பு பணியகத்தில் உறுதிப்படுத்துமாறு உறவினர்களால் கோரப்பட்டிருப்பதாகவும் இதுவரைக்கும் அதற்கான எவ்வித பதில்களும் வழங்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்து வருகின்றார்கள். இதன்மூலம் பொறுப்பு கூறவேண்டிய நிலையில் இருக்கின்ற வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் வேலை செய்பவர்களுக்கும் இடையிலான தொடர்பற்ற நிலையினை உணர்ந்து கொள்ள முடிகிறது இது ஒரு ஆரோக்கியமற்ற செயற்பாடாகும். இதுபோன்ற பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

எனவே பாதிக்கப்பட்டுள்ள இந்த குடும்பத்துக்கான நீதியை விரைவாக பெற்றுக் கொடுப்பது மட்டுமல்லாது வெளிநாட்டு வேலைக்காக செல்லும் ஒவ்வொருவருடைய நலன் தொடர்பிலும் வேலைவாய்ப்பு பணியகம் உட்பட அதனுடன் தொடர்பான அமைச்சுக்களும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வண்ணம் செயற்பட வேண்டும் எனவும் இச் சபையினூடாக கேட்டுக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages