(அப்துல்சலாம் யாசீம்)
தடிமல் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடன் வைத்தியரை நாடுமாறு திருகோணமலையை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
திருக்கோணமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதாகவும்,பரிசோதனைகள் மேற்கொள்ளும்போது அதிகமாக தொற்று காணப்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் இருக்கமான முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இதேவேளை அனாவசியமான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் தடிமல் காய்ச்சல் இருந்தால் நோய்த் தாக்கம் அதிகரிக்க முன்னர் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரை நாடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 60 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ள நிலையில் ஐந்து மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும்,திருகோ ணமலை மாவட்டத்தில் மொத்தமாக இன்று வரை 48 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் மூன்று மரணங்களும் மூதூரில் ஒருவரும் உப்புவெளியில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மூன்றாவது அலையில் திருகோணமலை மற்றும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அதிக அளவிலான தொற்றாளர்கள் இருந்தபோதிலும் தற்பொழுது கிண்ணியா மூதூர் குரிஞ்சாங்கேணி போன்ற பகுதிகளில் தொற்று அதிகரித்து வருவதாகவும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment