(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-பூம்புகார் லொக்டவுன் செய்யப்பட்ட மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் அவதியுற்று வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூம்புகார் பிரதேசம் லொக்டவுன் செய்யப்பட்டு ஒரு மாதத்தையும் கடந்துள்ளது.
அன்றாட கூலி தொழிலை நம்பி வாழ்ந்து வந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் 5,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாத்திரம் வழங்கப்பட்டதாகவும் ஒரு நாளைக்கு ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய்க்கு மேற்பட்ட பணம் தேவைப்படும் பட்சத்தில் ஒரு மாதத்திற்கு 5,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமக்கு சரியான முறையில் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சிறு பிள்ளைகள் மற்றும் முதியவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் கூட அல்லலுற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
லொக் டவுன் செய்யப்பட்ட பூம்புகார் பகுதிக்கு மீன் வியாபாரிகள் வருகை தந்தும் ஒரு கிலோ மீன் 800 ரூபா தொடக்கம் 1000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் அதனைக் கூட பெற்றுக்கொள்வதற்கு தங்களிடம் பணம் இல்லை எனவும் தமது பிரதேசத்தை மிக விரைவில் அரசாங்க விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை பூம்புகார் பிரதேச மக்கள் தமது சிறார்களுக்கு குடிப்பதற்கு பால்மா மற்றும் முட்டைகள் அத்தியவசியமான பொருட்கள் முகக் கவசங்கள் தங்களுக்கு அவசரமாக தேவைப்படுவதாக சமூக அபிவிருத்தி கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன் பிரகாஷ் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து சமூக அபிவிருத்தி கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன் பிரகாஷ் சிறார்களுக்கு தேவையான பால்மா, முட்டைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள், முக கவசங்கள் போன்ற பொருட்களை அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இன்று (30) மாலை வழங்கி வைத்தார்.
அத்துடன் தாம் தொழில்களுக்கு செய்ய முடியாதமையினால் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் தமது பகுதியை விடுவிக்க ஏதாவது நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதியில் உள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment