நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனடியாக வீடியோ வடிவில் தெரிந்து கொள்ள Trincolive யூடியுப் பக்கத்திற்கு செல்லவும். பெல் பட்டனை அழுத்தவும்.மற்றவர்களுக்கும் செயார் செய்யவும்.
(அப்துல் சலாம் யாசீம்) |
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கும் வேலைத்திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலுக்கிணங்க இன்று (26) கிண்ணியா பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாதமொன்றுக்கு 10 கிலோ கிராம் என்றடிப்படையில் குடும்பமொன்றுக்கு இரண்டு மாதங்களுக்கு 20 கிலோ கிராம் அரிசி இலவசமாக அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் இவ்வுதவியினை பெற்றுக்கொள்வதற்காக 88870 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் இத்திட்டத்தின் கீழ் 17212 குடும்பங்கள் பயனைப்பெறவுள்ளனர்.
வழங்கப்படும் இவ்வரிசியினை விற்பனை செய்யாமல் தம் நுகர்வுக்கு பயன்படுத்தல் வேண்டும். இது அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் உதவியாக உள்ளது. சிலரிடம் மேலதிகமாக அரிசி காணப்படும்போது இதனை விற்பனை செய்ய முற்படுவதுன்டு. அவ்வாறு மேலதிகமாக அரிசி காணப்படுபவர்கள் அதனை தேவையுடையவர்களுக்கு விற்பனை செய்யாமல் இலவசமாக வழங்குவது மிக ஏற்புடையதாகுமென இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்தார்.
நெருக்கடிமிக்க நிலையில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் வறிய மக்களுக்கு இவ்வுதவியினை வழங்குகின்றது. தம் பிள்ளைகளின் போசாக்கு தேவையை நிறைவேற்ற இது ஏதுவாக அமையும் என இதன்போது கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.மொஹமட் கனி தெரிவித்தார்.
மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
இந்நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பு செயலாளர், கிண்ணியா பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment