ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி வழங்கும் திட்டத்துக்கு அமைய திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் இன்று (21) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் கல்மெட்டியாவ தெற்கு கிராம சேவகரின் பிரிவில் உள்ள முள்ளிப்பொத்தானை விகாரையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கபில நுவன் அத்துக்கோரள ,மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி ஆகியோர்களின் பங்குபற்றலுடன அரிசி பொதிகள் வழங்கப்பட்டன.
குறித்த அரிசிப் பொதியானது 10கிலோ கிராம் எடை கொண்ட தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த குடுமபங்களுக்காக தலா ஒரு குடும்பத்துக்கு ஒரு பொதி என்ற நிலையில் வழங்கி வைக்கப்பட்டன. அஸ்வெசும,சமுர்த்தி, முதியோர் கொடுப்பனவு,அங்கவீனமுற்றோர் கொடுப்பனவு, சிறு நீரக கொடுப்பனவு பெறும் பயனாளிகள் மற்றும் காத்திருப்பு பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இது வழங்கப்பட்டன.
கல்மெட்டியாவ தெற்கு கிராம சேவகர் பிரிவில் முதற் கட்டமாக 150 பயனாளிகளுக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டதுடன் மொத்தமாக 574 பயனாளிகள் இக் குறித்த அரிசிப் பொதிகளை பெற தகுதி பெற்றுள்ளதுடன் மொத்தமாக தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் 12 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் 7104 குடும்பங்கள் அரிசிப் பொதிகளை பெற தகுதி பெற்றுள்ளனர்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அரசாங்கம் வழங்கும் மற்றுமொரு விசேட சலுகைகளாக இது காணப்படுகிறது.
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோரள, மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி,தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment