திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது போதைப் பொருட்களை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 11 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய திருகோணமலை மாவட்டத்தில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பத்துப்பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் புலனாய்வுத்துறையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை தொடர்பில் கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்பிற்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேரும், கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியா. காக்காமுனை பகுதியில் 1000 மில்லி லீட்டர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஸ்ரீபுர பகுதியில் 750 மில்லி லீட்டர் கசிப்பு வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பதவிஸ்ரீபுர பொலிஸ் பிரிவில் உள்ள பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment